Tuesday, 29 September 2015

கணினி வளர்ச்சியில் தமிழ்

கணினி வளர்ச்சியில் தமிழின் பங்கு மகத்தானது என்று சொன்னால் அது மிகையில்லை. காரணம் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் மூத்தவள் என் தாய் தமிழ். இன்று விஞ்ஞான உலகில் நாம் பல சாதனைகளை படைத்தும், படைத்துக் கொண்டும்  உள்ளோமா அதைப் போல கணினி வளர்ச்சியில் நமது தமிழும் அசுர வளர்ச்சி கண்டு வந்துள்ளது. ஒவ்வாரு துறையின் வளர்ச்சி பற்றி கூற முடியாது என்பதால் இன்றைய சூழலில் இளைஞர்களின் இரண்டாவது உலகம் என நம்பப்படும் வெள்ளித்திரையில் தமிழ் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்து அதற்கான அங்கீகாரம் நாள்தோறும் கிடைத்தது நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் கணினி வளர்ச்சியால் பல தமிழ் படங்கள் தேசிய விருதுகளை அள்ளி வந்துள்ளது. அவற்றில் சில "தங்க மீன்கள் " படத்தில் இடம்பெறும் "ஆனந்த யாழை மீட்டுகிறாள் மற்றும் "காக்கா முட்டை" படம்.மேலும் கணினி பயன்பாடு விரிவானதால் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் வளர்ச்சியில் தற்பொழுது இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இரண்டாம் மொழியாக பாட சாலைகளில் கற்பிக்கப்படுகிறது. மேலும் மேனாள் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் கூட ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் பொழுது புறநானூறு பாடல் பெருமையை உலகறியச் செய்து தமிழின் பெருமையை பறைசாற்றினார். இன்று பல ஆராய்ச்சி மாணவர்கள் கணினி மூலம் பல செயலிகள் உருவாக்கி அதை உலகிற்கு அறிமுகம் செய்து பலரும் பயன்படுத்தும் வகையில் கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது தமிழுக்கு. சமீபத்தில் கூட சட்ட சபையில் பெண்களுக்காக இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது கணக்குகளை எளிதில் பராமரிக்க ஒரு செயலி உருவாக்கி அதன் அறிவிப்பை விதி எண் 110 ன் கீழ் முதல்வர் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளது தமிழுக்குப் பெருமையே. இன்று அரசுத் துறைகள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு அதிக முன்னுரிமை தமிழுக்குத் தான் என்பதில் ஐயமில்லை. ஆங்கிலேய ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்ட நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நாடாளுமன்றத்திலும்,வீதிகளிலும் போராட்டம் வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் சாத்தியமானது கணினி வளர்ச்சியில் தானே. இதையெல்லாம் விட கணினியில் ஒரு பெரிய புரட்சியை  ஆராய்ச்சி மாணவி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  ஆம்! தமிழில் நாம் தட்டச்சு செய்தால் அது மாற்று மொழியில் எவ்வித இலக்கண பிழையின்றி மொழியாக்கம் செய்யும் செயலியை உருவாக்கி அதில் புதிய மைல்கல் சாதனை படைத்து அது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சில நேரங்களில் நாம் நமது குணத்தை மாற்றுவோம் ஆனால் கணினி நிலையான ஆட்சியை தமிழுக்கு ஆற்றி வருகிறது. ஒரு முறை சிங்கப்பூர் தந்தை என்று அழைக்கப்படும் திரு. லீ குவான் யூ இவ்வாறு கூறினார். "சிங்கப்பூர் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் தமிழர்கள். இந்திய மொழி என்றால் தமிழ் மொழி. எனவே தமிழ் தான் இங்கு ஆட்சி மொழி. இந்திக்கு இங்கு இடமில்லை "என்றார். இதற்கு காரணம் கணினியும், புலம்பெயர்ந்த தமிழர்களும் தான். கணினிசார் துறையில் தமிழின் வளர்ச்சியை உலகமே கண்டு வியந்துள்ளது . இந்தியாவில் எப்பொழுது தாராளமயமாக்கல் கொண்டு வரப்பட்டதோ அப்பொழுதே நம் தமிழ் மொழியும் உலக பொதுமொழியாக்க வேண்டும் என்று ஐ.நா வில்  1991 சூன் திங்கள் 29 கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கான பதிலும் அதே ஆண்டு சூலை 23 ல் உங்களுடைய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் நகலை எங்களுடைய அவைக்கு அனுப்பி வைக்கவும் நாங்களும் பரிசீலனை செய்கிறோம் என்று கூறியுள்ளார்கள். இதன் முயற்சியாக பல விதமான சரித்திரங்கள் கணினி வளர்ச்சியில் தமிழ் கண்டு வருகிறது. "காயும் ஒரு நாள் கனியாகும் நம் கனவும் ஒரு நாள் நனவாகும் "என்ற கவிஞரின் வரிகளுக்கிணங்க நாமும் உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழின் சேவை தொடரும் என்று நம்பலாம்.
           வாழ்க தமிழ்
           வளர்க கணினி

புதுகை அடிமை.

Sunday, 27 September 2015

மீண்டும் விதைக்கலாம் தமிழ்.

" வீரம் சேர்ப்பது தாய்ப்பால் " என்றான் பாரதி ஏனோ நான் மழலைப் பருவத்தில் எனது தாயார் புகட்டிய தாய்ப்பால் வீணாகிப் போனதாகவே கருதிகிறேன். காரணம் நான் எல்லா விசயங்களிலும் வீரனாக இல்லை. மொழி விசயத்தில் நான் ஒரு கோழையே. இதன் காரணத்தை ஆராய்ந்த பொழுது எனக்கு சித்தர்கள் கூறிச் சென்ற பழமொழி நினைவிற்கு வருகிறது. " காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் " என மண்டலம் கொண்டால் கோலூன்றி நடக்கும் கிழவன் கூட கோல் வீசி நடப்பான். ஆனால் இன்று நானும் எனது சமுதாய மக்களும் ஒரு மண்டலம் அல்ல பல மண்டலங்களாக நாகரிகம் என்ற பெயரில் ஆங்கிலம் என்னும் போதையால் தள்ளப்பட்டுள்ளோம். முழுமையாக 20 நிமிடங்கள் கூட ஆங்கிலத்தில் பேசத் தெரியாத நான் 300 ஆண்டிற்கு முன் வந்ததை முன்னிறுத்தி பல்லாயிரம் ஆண்டு முன் தோன்றிய தமிழை வினைச் சொல்லிற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இந்த நிலை நிரந்தரமாக நீடிக்க விரும்பவில்லை. வீரம் நிறைந்த என் தாய் தமிழ் நாட்டில் சிறு வயதில் எனக்கு பல நேரங்களில் தமிழ் கதைகளைக் கூறி சோறூற்றினாள். அப்படி கூறியதை நான் நினைவு படுத்தி பார்க்கையில் கூட அதில் ஆங்கில மொழி கலந்ததாகத் தெரியவில்லை. நம்மை எதிர்த்துப் போராட வழியில்லாமல் நம் நாட்டை விட்டு ஓடிய வெள்ளையர்கள் கோழைகள் ஆனால் நாம் அந்த கோழைகளின் தாய் மொழியைப் பின்பற்றி வருகிறோம். " உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமெனில் நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே ".என்று ஹிட்லர் கூறினார். ஆனால் இன்று தூய மொழியில் பேசினால் சமுதாயம் என்னை ஏளனம் செய்கிறது. அதற்காக நான் ஆங்கிலம் வேண்டாமென்று கூறவில்லை மாறாக தமிழை மறக்க வேண்டாம் என நினைக்கிறேன். கனிம வளங்கள் நிறைந்த நம் நாட்டில் இப்பொழுது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைப் போல தமிழ் மொழியும் வற்றிக்கொண்டு உள்ளது இதை மீண்டும் விதைக்கலாமே ? அப்படியானால் இதை யார் செய்வது. நான் தானே செய்ய வேண்டும். எனக்கு வழிகாட்டுவது யார்? என்னை வளர்த்த பெற்றோர்களா ? (அ)ஆசிரியர்களா இல்லை நாளைய படைப்பாளியாகத் தன்னை செதுக்கிக் கொண்டிருக்கும் கவிஞர்களா, எழுத்தாளர்களா,இலக்கியவாதிகளா முடிவு உங்களிடமா இல்லை முயற்சி என்னுடையதா ?.எனக்கும் நிலம் உண்டு. நிலத்தில் விளைச்சல் சரியாக இல்லையென்றால் பல விதமான உரங்களைப் பயன்படுத்தி அவற்றை சரி செய்ய முயற்சி செய்வேன் அதைப் போல எனது தமிழும் சில ஆண்டுகளாக நோயுற்று மெலிந்து கொண்டு வருகிறது. தேவை மருந்து இல்லை. மருத்துவர் தான். ஏராளமான மருத்துவர்களை உருவாக்கி பெருமை கொள்ளும் நாம் தமிழ் மொழி மருத்துவர்களை முழுமையாக இந்த சமூகத்திற்கு தராமல் பாராமுகமாக இருப்பது ஏன்? மருத்துவனுக்கு மனித நேயம் தேவை. நமது தாய் தமிழ் மனித நேயம் மிக்கவள் .நம்மையும் நமது முன்னோர்களையும் இணைத்தது தமிழ் தான். நாம் அனைவருமே மனித நேயம் மிக்கவர்கள் அதனால்தான் நம்மையும் அறியாமல்  சிறிது சிறிதாக நாம் ஆங்கில மருந்துகள் தவிர்த்து தமிழ் மருத்துவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறோம்.சமீப காலமாக நமது உணவிலும் மாற்றம் விரும்பி பழைய உணவைத் தேடி உண்கிறோம். அவற்றை விளையச்செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். வரலாற்றில் பல சரித்திரங்கள் நமது மொழிக்கு உண்டு. அதைப் போல மீண்டும் தமிழை விதைப்போம். இதன் பெருமையை உலகுக்கு உறக்கச் சொல்வோம்.  கண்ணதாசன் அழகாக ஒரு வரியைக் கூறுவார். "எனக்கு மதம் இந்து மதம் ஆனால் எனக்கு இன்னொரு மதமும் உண்டு அது தாமதம் " என நகைச்சுவையாக தமது குறையைக் கூறி அடுத்த மேடையில் சரி செய்து விடுகிறேன் என்று கூறுவார் அதைப் போல நாமும் தமிழுக்குத் திரும்புவோம் ஏனெனில் எனக்கும் மனித நேயம் உண்டு.
"வாழ்க தமிழ்
வாழ்க வளமுடன் ".

Friday, 18 September 2015

என்னை வெளியில் (ஆற்றல் )விடுங்கள்

"நீ உன்னுடைய ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் பொழுது உனது புறத்தோற்றத்தை
உலகமே உற்று நோக்கும்". ஆற்றல் என்பது அறிவியலில் நாம் படித்த வெப்ப ஆற்றலோ, இயக்க ஆற்றலோ அல்ல .மாறாக நான் எனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது. நான் எந்தத் தகுதியும் இல்லாமல் தாயின் கருவறைக்குச் செல்லும் முன் பல மில்லியன் கோடி விந்தணுக்களைக் கொண்ட எனது சகோதர /சகோதரிகளைக்  கொன்று கருவறையை எனக்கு மட்டுமே அபகரித்துக் கொண்டேன்.ஆனால் இன்று எனக்கு பல விதமான தகுதிகள் இருந்தும் நான் தயங்குவது ஏன்? .இன்றைய கஷ்டத்தைக் கண்டு துவண்டு விட்டால் நாளைய மகிழ்ச்சியை இழந்து விடுவேன் என்பதை எப்போது உணர்வது.இவ்வாறு எனது தாய் நினைத்து இருந்தால் நான் இந்த உலகைக் கண்டிருப்பேனா? இச்சமூகத்தில் வாழப் பல வழிகள்
உள்ளன. எனது உடன்பிறப்புகளே நம்மை வெளியில் விடாமல் தடுப்பது எது?சரியான நேரத்தில் நீங்கள் என்னை முழுமையாக பயன்படுத்த வில்லையெனில் இழப்பு உங்களுக்குத் தான். இன்றைய வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் அனைவரும் என்னை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தியதால் தான் நமக்கும் நம் பெற்றோருக்கும் பெருமை. நீங்கள் சராசரி மனிதனாய் இருப்பதை விட சாதனை மனிதனாய் இருந்து பாருங்கள். ஆனால் இவை சிறிது கடினமே. இதற்கு நீங்கள் சில தியாகங்கள் செய்ய வேண்டும். இன்று பெரிய காரியங்களில் வெற்றி பெற தேவை சிறு சிறு தியாகம் மட்டுமே. தியாகம் என்பது மகாத்மாவைப் போல அறவழியில் போராட வேண்டாம். உங்களது விளையாட்டு நேரத்தைக் குறையுங்கள், தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறையுங்கள், சாப்பாடு அளவைக் குறைக்காமல் சாப்பிட எடுத்துக் கொள்ளும் நேரத்தை மட்டும் குறையுங்கள். மேலும் உறவினர்கள் இல்ல விழாக்களுக்குச் செல்லும் நேரத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் மாறாக உறவுகளை முறிக்க வேண்டாம். ஏனெனில் சிறு சிறு உளியைக்கொண்டு தான் பெரிய பாறைகளை உடைக்க முடியும். அது போல சிறு சிறு தியாகங்கள் தான் உங்களை சாதனை படைக்க ஊன்று கோலாய் அமையும். இவையெல்லாம் நீங்கள் முறையாக கடைப்பிடித்தீர்கள் எனில் உங்கள் வாழ்விலும் வசந்தம் வீசும், அமைதி நிலவும், உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும். மேலும் உங்களுக்காக நான் மிகப்பெரிய யாகசாலை ஏற்படுத்தி அதில் சிறு சிறு விறகு குச்சிகள் போட்டு நெய் ஊற்றினால் எரியுமா என்றால் எரியாது .மாறாக தீக்குச்சி கொண்டு பற்ற வைக்க வேண்டும் அது போலவே ஆற்றல் என்பது மிகப் பெரிய தீ அதில் நீங்கள் எவ்வளவு தியாகம் செய்கிறீர்களோ அவ்வளவு தூரம் அது உங்களது புகழை பரவச் செய்யும் .எனவே நீங்கள் இருக்கும் இடத்தை அக்னியாக மாற்றுங்கள் வையகமும் வாழும். உங்களுக்குள்
எவ்வளவு  ஆற்றல் மட்டும் இருந்தாலும் உங்களுக்குள் சாதிக்கணும் என்ற வெறி இருந்தால் நிச்சயமாக உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

      வாழ்க தமிழ்
      வாழ்க வளமுடன்

               புதுகை அடிமை.

Wednesday, 16 September 2015

தீர்ப்பு நியாயமா?

ஒரு ஊரில் ஒரு ராஜா வாழ்ந்து வந்தார். அவர் மீது மக்கள் மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். காரணம் அவர் ஏழை மக்களுக்கு வரிவிலக்கு அளித்து நடுத்தர மக்களிடம் மட்டும் குறைவான வரிவிதிப்பு செய்தார். மேலும் மக்கள் கொண்டு வரும் வழக்குகளுக்கு சரியான தீருவையும் எடுத்துரைத்தார். மன்னர் ஒவ்வாரு முறை வழக்கில் தீர்வு கூறுகையில் அவரது வாரிசான இளைய மன்னர் தீர்ப்பை உன்னிப்பாக கவனித்து விமர்சனம் செய்து தந்தையை பாராட்டுவார். ஒரு முறை மன்னரிடம் வழக்கு விசாரணைக்குவந்தது. விவசாயி மன்னரிடம் எனது விவசாய நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்து இருந்தது அறுவடை செய்ய இருந்த நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் ஆடு எனது வயலில் இறங்கி பயிரை சீரழித்து விட்டது என்று கூறினார். மன்னர் எதிர்வாதியை அழைத்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.மன்னர் விளைச்சலுக்குப் பகரமாக நீ உன்னுடைய ஆடுகள் அனைத்தையும் அவருக்கு வழங்கி விட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதைக்கேட்ட இளவரசர் கடும் அதிருப்தி அடைந்ததை பார்த்த மன்னர் இளவரசரிடம் தீர்ப்பு பற்றி கருத்து கேட்க இளவரசர் தாம் கருத்து கூற விரும்பவில்லை என பதிலளித்தார். உடனே மன்னர் இவ்வழக்கிற்கு இளவரசர் தீர்ப்பு அளிப்பார்கள் என கூறி மன்னர் இளவரசரின் தீர்ப்பை கேட்க ஆவலாய் அமர்ந்தார். இளவரசர் தீர்ப்பு கூறினார் நீ உன்னுடைய ஆடுகள் அனைத்தையும் ஒரு ஆண்டிற்கு மட்டும் விவசாயிக்கு சொந்தம் ஒரு ஆண்டிற்கு பிறகு அவர் ஆடுகளை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த காலத்தில ஆடு ஈன்ற குட்டிகள் அனைத்தும் விவசாயிக்கு சொந்தம் இந்த காலத்தில் ஆட்டின் கழிவுகளை விவசாயி தனது நிலத்தில் பயன்படுத்திக் கொல்லலாம்.இதுவே இவ்வழக்கின் தீர்ப்பு என்றார் இதைக் கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர்.

நீதி
இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு பல்வேறு விதமாக வழங்கப்படுகிறது இதற்கு யார் பொறுப்பு ஏற்பது. குற்றம் ஒன்று தீர்ப்பு இரண்டு. இதற்கு கல்வி முறையில் மாற்றம் வேண்டுமா அல்லது சமுதாய மாற்றம் வேண்டுமா? நீதிபதிகள் கடவுளுக்கு சமம் என்றால் தீர்ப்பில் முரண்பாடுகள் ஏன். இன்றைய மாணவர்கள் அனைவரும் சிந்தியுங்கள் நாளைய மாற்றத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும்.

                    புதுகை அடிமை.

Sunday, 23 August 2015

தணலில் அழிகிறது சாதி

என் பிறப்புச் சான்றில்
சாதி இல்லை
இறப்புச் சான்றிலும்
சாதி இல்லை
வாழும் போது மட்டும்
என் அப்பனின் சாதி
இறந்த பின் எரிவது
எனது உடல் மட்டுமில்லை
என் சாதியும் தான்
தணலில் அழிகிறது.
                                   -அடிமை.